பாலிதீன் பைகள் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள்



சாலையோர கையேந்திபவன்கள் முதல் ஹோட்டல்கள் வரை உணவு மடித்துக் கொடுக்க பாலிதீன் பேப்பர்கள், பைகளையே (கேரி பேக்ஸ்) பயன்படுத்துகிறார்கள். எடை குறைவு மற்றும்
விலை மலிவான இந்தப் பொருட்கள் உயிருக்கு உலை வைப்பவை என்பதுதான் ரத்தத்தை உறைய வைக்கும் பகீர் தகவல்.

முழுவதும் பாலிஎதிலீன் எனப்படும் ரசாயனம் கொண்டு செய்யப்படும், இந்த பிளாஸ்டிக் பைகள், பேப்பர்களில் உணவுப் பொருட்களை வைப்பதால் அலர்ஜி முதல் கேன்சர் வரை வரும் ஆபத்து உண்டு என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவுப் பொருட்களை வாங்கிச் செல்லும்போது, பிளாஸ்டிக் சூடாகி வேதியியல் மாற்றங்களால் ஹைட்ரோகார்பன் மற்றும் பியூரான் போன்ற நச்சு வாயுக்கள் உணவில் கலந்து விடுகின்றன. 

அந்த உணவை உண்பவர்களுக்கு
நுரையீரல் பாதிக்கப்படுகிறது. மேலும் உடலில் அரிப்பு, தடிப்புகள், கொப்புளங்கள்,மூச்சு விடுவதில் சிரமம்,ஹார்மோன் சமச்சீரின்மை,உணவுக் குழாயில் கேன்சர் ஆகியவையும் ஏற்படுகின்றன.

மேலும் அந்த உணவை உண்பவர்களுக்கு குறிப்பாக, கர்ப்பிணிகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுகிறது. தாய்ப்பால் கொடுக்கும் போது, குழந்தைகளையும் பாதிக்கிறது. 

பிளாஸ்டிக் பைகளில் உள்ள உணவுப் பொருட்களை கால்நடைகள் உட்கொள்ளும்போது, கால்நடைகளின் உணவுக்குழல் அடைபட்டு அவை இறந்து போகின்றன. 

சில உயிரினங்கள் பேப்பர் என்று நினைத்துக் கொண்டு தவறுதலாக பிளாஸ்டிக் பைகளை உண்டுவிடுகின்றன. யானைகள், மாடுகள் இப்படி இறந்து போகும் நிகழ்வுகள் நிறைய பதிவு செய்யப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் பைகள் குப்பைகளுடன் சேர்த்து எரிக்கப்படும்போது, பைகளில் உள்ள சாயத்தால் காற்று மண்டலம் மாசுபடுகிறது. பல்வேறு சுவாச நோய்களை தோற்றுவிக்கிறது.

பிளாஸ்டிக் பேப்பர், பைகளுக்கு பாலிஎதிலீன் (பி.இ.) தான் மூலப் பொருள். குறிப்பிட்ட வெப்பநிலை, அழுத்தத்தில் இந்தப் பைகள் உருவாக்கப்படும்.
எண்ணெய், பால் உணவு வகைகளை "பேக்' செய்யப் பயன்படும் கவர்களை அதிக அழுத்தம் கொடுத்து தயார் செய்வார்கள். அதனால் அந்தப் பொருட்கள் கெட்டுப் போகாது. 

ஆனால் குறைந்த அழுத்தம் கொடுத்து தயாரிக்கப்படும் பேப்பர், பைகளால் நிச்சயம் பிரச்னைதான்!' என்று சொல்லும் பிளாஸ்டிக் ரசாயன பகுப்பாய்வு நிபுணர்கள், சூடான உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பேப்பர், கேரி பேக்குகளில் வைக்கும்போது, அந்த பிளாஸ்டிக் பையிலுள்ள ரசாயனம் உணவில் கலந்துவிடும். அதனால் உணவு விஷமாக மாறிவிடும் ஆபத்து உண்டு, என்கிற எச்சரிக்கையையும் பதிவு செய்கிறார்கள்.

பொதுவாக, 60 டிகிரி சென்டிகிரேட் வரை சூடு தாங்கும் பேப்பர், கேரிபேக்குகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்பது நடைமுறை விதி. ஆனால் கையேந்தி பவன்கள், ஹோட்டல்களில் அத்தகைய கேரி பேக்குகளைத்தான் பயன்படுத்துகிறார்களா என்பது சந்தேகம்தான்.

வெப்பநிலை மட்டுமல்ல. கேரிபேக், பேப்பர்களின் தடிமன் அளவும் முக்கியம். அதாவது 40 முதல் 60 மைக்ரான் அளவுள்ள கேரி பேக்குகள் என்றால் பாதிப்பு இருக்காது. மாறாக அளவு 20 மைக்ரான் என்றால் பிரச்சினை பெரிதாகிவிடும்!' என்று சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பிளாஸ்டிக் பைகளின் ஆபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் "இந்திய கன்சர்ட் நுகர்வோர் அமைப்பின் தலைவர் சந்தானராஜன் "கேரி பேக், பிளாஸ்டிக் பேப்பர்கள தயாரிப்பதில் பாலிஎதிலீன் மட்டுமல்லாமல் சில வகை அமிலங்களையும் பயன்படுத்துகிறார்கள். இப்போதெல்லாம் கடைகளில் சூடான் டீயைக் கூட பல மணி நேரங்களுக்கு முன்பே கேரி பேக்குகளில் அடைத்து விற்பதுதான் கொடுமையின் உச்சக்கட்டம். இதனால் உடலில் ஏராளமான பாதிப்புகள் உண்டாகும்!'' என்கிறார் சற்றே எச்சரிக்கை கலந்த குரலில்.

பெரும்பாலான மாநிலங்கள் 40 மைக்ரானுக்கும் குறைவான அளவுள்ள பாலிஎதிலீன் கேரி பேக், பேப்பர்களுக்குத் தடை விதித்துள்ளன. இருந்தாலும் கடுமையான சட்டங்களை அமல்படுத்தவில்லை. அதனால் 15 முதல் 20 மைக்ரானுக்கும் (80 காஜ்) குறைவான அளவுள்ள கேரிபேக்குகள் தயாரிக்கப்பட்டு, சந்தைக்கு அனுப்பப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

எனவே பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கப் பழகுவோம். மற்ற நண்பர்கள், உறவினர்களுக்கும் இச்செய்தியை எடுத்துச் சொல்வோம். அவசரத் தேவைக்கு ஒன்றிரண்டு முறை பிளாஸ்டிக் பையை பயன்படுத்தினால், அந்த பிளாஸ்டிக் பொருட்களை குப்பையோடு குப்பையாகப் போடாமல், சேமித்து மறுசுழற்சிக்கு அனுப்புவோம்.

0 comments:

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.