ஹராமான வழியில் பொருளீட்டுதல்



நாம் உண்ணும் உணவில் மிகவும் சிறந்தது,நாம் ஹலாலான வழியில் உழைத்து சம்பாதித்த பணத்தின் மூலம் பெறும் உணவாகும். இஸ்லாம் ஹலாலான வாழ்க்கையை வலியுறுத்துகின்றது.

உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)

அல்லாஹ்வின் தூதரே! பரிசுத்தமான தொழில் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. ஒரு மனிதன் தனது கையால் உழைப்பதும், (மோசடியில்லாத) நல்ல ஒவ்வொரு வியாபாரமும் என்று என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : அஹ்மத்)

ஹலாலான உணவைத் தேடுவது (தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற) ஃபர்ளான காரியங்களை அடுத்துள்ள ஃபர்ளாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : பைஹகீ)

உழைப்பால் உயர்வும், யாசகத்தாலும்,மோசடியாலும் இம்மை – மறுமையில் இழிவும் ஏற்படும் என்பதை நபியவர்கள் தெளிவாக சுட்டிக் காட்டினார்கள்.
எனவேதான், எண்ணற்ற இடங்களில் இக்கருத்து குர்ஆன் – ஹதீஸ்களில் வலியுறுத்தப்படுகிறது.

இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் (ஒருவருக்கொருவர்) ஒப்புதலின்அடிப்படையில் நடைபெறும் வணிகத்தின் மூலமாகவேயன்றி, உங்களிடையே ஒருவர் மற்றவரின் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்.    (அல்குர்ஆன் 4:29)

ஹராமான உணவால் செய்யும் அமல்கள் ஏற்கப்படாது.

“பத்து திர்ஹங்கள் கொடுத்து ஒருவர் ஓர் ஆடையை வாங்கினார். அதில் ஒன்பது திர்ஹம் ஹலாலாகும். ஒரேயொரு திர்ஹம் மட்டும் ஹராமாகும். இந்த ஆடையை அவர் அணியும் காலமெல்லாம் அவரது எந்த நல்லமலும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரழி)   நூல்:மிஷ்காத்,பக்கம்:243)

ஒரு முறை சஅத் பின் அபீவக்காஸ்(ரழி) அவர்கள் நபியவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் கேட்கும் துஆவை இறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக தாங்கள் துஆ செய்யுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், “சஅதே! உங்களின் உணவை ஹலாலானதாகவும் சுத்தமானதாகவும் ஆக்கிக்கொள்ளுங்கள். துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் மனிதர்களில் நீர் ஆகி விடுவீர். ஹராமான ஒரு கவள உணவு நாற்பது நாட்களின் நல்லமல்களை ஏற்றுக்கொள்ளப்படாமல் ஆக்கிவிடும். மேலும், ஹராமான உணவில் உருவான சதை நரகத்திற்கே உரியதாகும்” என்று கூறினார்கள்.    (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர், பாகம்:1,பக்கம்:203)

இஸ்லாத்தில் மிக அதிகமாக வலியுறுத்திக் கூறப்பட்டுள்ள ஹலாலான உழைப்பும்,சம்பாத்தியமும் நம்மில் சிலரால் மறக்கப்படுவதும்,அவர்கள் ஹராமான வழியை தேர்வு செய்வதும் மிகவும் வேதனையளிக்கக் கூடிய கசப்பான உண்மை ஆகும்.

ஆம், சிலர் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத ஹராமான பணியிடங்களில் பணிபுரிவதும்,நம்பிக்கைமோசடி மற்றும் கடனை பெற்றுக் கொண்டு அதைத் திருப்பிச் செலுத்தாமல் பணமோசடிகளில் ஈடுபடுவதும் அண்மைக்காலமாக பெருகி வருகிறது.வட்டி மட்டும் தான் ஹராமென வாதிடும் சிலர்,மேற்கூறிய சில பாவச்செயல்களை ஹராம் என ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.

சிலர் உள்நாடுகளில் மட்டுமின்றி சில ஐரோப்பிய நாடுகளிலும் சம்பாதிப்பதற்காக என்று சென்று அங்கும் ரூபாய் மதிப்பில் சில லகரங்களோடும்,கோடிகளோடும் தங்கள் கைவரிசையைக் காட்டுகின்றனர்.

அவர்கள் இது போன்ற மோசடிகளில் ஈடுபட பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும்,சிலர் குடும்பத்தினரின் "அடுத்தவரைப் போல தாமும் பகட்டாக வாழ வேண்டும்" என்ற பேராசையையும், ஒப்பீடை(COMPARISON)யும் நிறைவேற்ற வேண்டிய நிர்பந்த்தத்தாலும்,நச்சரிப்பாலும் இது போன்ற மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

சிலர் விரைவாக கஷ்டப்படாமல் பணக்காரர்களாக வேண்டும் என்ற பேராசையாலும் இந்த பாவத்தை செய்கின்றனர்.

இவை ஒரு வகையில் காரணமானாலும்,தக்வா என்னும் அல்லாஹ்வின் மீதான இறையச்சம்-பயபக்தி குறைந்து போனதே மிக முக்கியக் காரணமாகும்.

இந்த உலகத்தை படைத்து நிர்வகித்துவரும் (படைப்பாளியான) ஏக இறைவனாகிய "அல்லாஹ்" நம்மை எங்கிருந்தாலும் எந்நிலையிலும் எந்நேரமும் கண்காணிக்கின்றான் என்று எண்ண உறுதியை ஏற்படுத்துவது "தக்வா"வாகும்

ஹராமானவற்றை அதாவது அல்லாஹ்வால் அனுமதிக்கப்படாத உணவுகள், போதைப்பொருட்கள், மதுபானங்கள் ஆகியவற்றை விலக்கி வாழ்வதோடு,  தவறான முறையில் ஏமாற்றித் திருடுதல், மோசடி செய்தல் ஆகியவற்றையும் விலக்கி வாழ வேண்டும்.
இது போன்ற விலக்கப்பட்ட செயல்கள் மூலம் சம்பாதித்தால் அல்லாஹ்விடம் கடுமையான தண்டனை உண்டு,
நம்முடைய ஒவ்வொரு செயலும் தனிமையிலோ, கூட்டத்திலோ, இரவிலோ, பகலிலோ, எங்கு நிகழும்போதும் அது அல்லாஹ் பார்வைக்கு மறைந்தது அல்ல என்ற எண்ண உறுதியை ஏற்படுத்துவது "தக்வா"வாகும்.

இந்த தக்வா-இறையச்சம் குறையும்போது தான் இது போன்ற தவறுகள்  நிகழ்கின்றன.

இது போன்ற தவறுகள் மூலம் கிடைக்கும் வருமானத்தால் அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் இழிவும்,வேதனையும்,விளைவுகளும் உண்டு.

ஒருவர் எவ்வளவு தொகை மோசடி செய்கிறாரோ அந்த தொகை அளவிற்கு அல்லது அதைவிட கூடுதலான அளவிற்கு மருத்துவ செலவு போன்ற எதிர்பாராச் செலவுகள் ஏற்பட்டு,ஹராமான வழியில் வந்த வருமானம் வந்ததைப் போன்றே சென்றுவிடும்.

அவர்களின் மனநிம்மதி பறிபோகிறது.

யாரை மகிழ்விக்க இந்த குற்றத்தை செய்தார்களோ அவர்களுக்கு அல்லது அவர்களின் அன்பான உறவினருக்கு அல்லாஹ் தீராத வேதனை தரும் கொடிய துன்பங்களை அல்லது நோய்களைக் கொடுத்து சோதிக்கிறான்.அதனால் அவர்களின் மனநிம்மதி பறிபோகிறது.

மேலும்,

  •  அவர்களுக்கு நல்ல அமல்கள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காது.
  • அவ்வாறு செய்தாலும் அதில் இன்பம் இருக்காது.
  • அவர்களின் நற்செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
  •  அவர்களின்துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படாது.
  • அவர்களின் செல்வத்தில் பரக்கத் இருக்காது.
  • கெட்ட செயல்களைச் செய்யுமாறு உள்ளம் தூண்டும்.
  • அவர்களின் குழந்தைகள் மோசமாகிவிடுவார்கள்.
  • அவர்களின் மனநிம்மதி பறிபோகிறது.
  •  ஹராமான பணம் வந்ததைப் போன்றே சென்றுவிடும்.
  • ஹராமான பொருளைச் சாப்பிடுபவன் சொர்க்கம் செல்லமாட்டான்.
  •  ஹராமால் வளர்ந்த சதை நரகத்திற்கே உரியது.
  • ஹராமை சாப்பிடுபவன் அல்லாஹ், ரசூல் ஆகியோரின் கோபத்திற்கு ஆளாவான்.
இவ்வளவு விளைவுகளையும்,துன்பங்களையும் தரும் அந்த ஹராமான சம்பாத்தியத்தால் யாருக்கு என்ன பயன்?

எனவே “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து”- என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் மற்றவர்களை பார்த்து எல்லாவற்றுக்கும் பேராசை படாமல்,அல்லாஹ் தந்த வாழ்வை மனநிறைவோடு வாழப் பழக வேண்டும்.

காலுக்கு போட காலனி இல்லாத ஒருவர்,மற்றவர் போட்டிருப்பதைப் போன்ற ஆடம்பர காலனி நம்மிடம் இல்லையே என்று வருந்தாமல்,ஒப்பிடாமல்,கால்களை இழந்து எத்தனையோ பேர் தவிக்கும்போது, அல்லாஹ் நடப்பதற்கு நமக்கு கால்களை தந்தானே,அல்ஹம்து லில்லாஹ் என்று அல்லாஹ்விற்கு நன்றி சொல்ல வேண்டும்.

அல்லாஹ் தந்த இந்த வாழ்வே போதும் என்ற மனநிறைவோடும்,அல்லாஹ்வின் மீதான பயபக்தியோடும் வாழ்ந்தால்,ஹராமான வழியில் பொருளீட்டும் தீய எண்ணமோ,மோசடி எண்ணமோ தோன்றாது.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் ஈமானையும்,தக்வா எனும் இறையச்சத்தையும் உறுதிப்படுத்தி,இது போன்ற ஹராமான செயல்களில் ஈடுபடாமல்,நம் அனைவரையும் பாதுகாப்பானாக! அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக! ஆமீன்!

0 comments:

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.