பயனுள்ள கிப்ட் எது?



நாம் பிறருக்கு அன்பளிப்பு(கிப்ட்) தரும் சமயங்களில் அது அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்குமா என்று பார்த்துக் கொடுக்கலாம்.

கர்ப்பிணிப் பெண்களைப் பார்க்கச் செல்கிறீர்கள் என்றால், உடனடியாகப் பயன்படக்கூடிய
இனிப்பு, காரம், பழம் என்று வாங்காமல் எப்படியாவது அந்தப் பெண்ணின் விருப்பத்தை அறிந்து, அவளுக்குப் பிடித்ததை வாங்கிச் செல்லலாம். அது இயலாத பட்சத்தில், நீண்டநாள் வைத்து பயன்படுத்தக்கூடிய பேரீச்சை, பாதாம், காய்ந்த திராட்சை ஆகியவற்றை வாங்கிக் கொடுக்கலாம். இது குழந்தை பிறந்த பின்பும்கூடப் பயன்படும்.

குழந்தை பிறந்ததை விசாரிக்கப் போகும்போது, சீனி(Sugar) வாங்கி கொண்டு செல்லும் பழக்கம் நம்மூரில் பெண்களிடையே உள்ளது.இன்னும் சிலர் அந்தப் பிஞ்சுக்கு பணம் அல்லது விதவிதமாக உடை வாங்கிச் செல்லத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால், அது அந்த சிசுவுக்கு பயன்பட வேண்டுமே! அதற்கு அதிகம் பயன்படக்கூடிய டயாபர் ஒரு டஜன் வாங்கித் தருவதே நல்லது. பிறந்த குழந்தைக்குப் பால் குடிப்பதும் "உச்சா" போவதும்தானே வேலையே. நாம் தரும் இந்தப் பரிசு அதற்கு நன்றாகவே பயன்படும்.

சர்க்கரை நோயாளிகளைப் பார்க்கச் செல்லும்போது உப்புக் கடலை, பட்டாணி போன்றவற்றை வாங்கிச் செல்லலாம். பொரித்த உப்புக்கடலை, அதிக உப்பு இல்லாமல் முழுதாக, தோல் இல்லாமல் கிடைக்கிறது. விலை குறைவாச்சே... இதை எப்படிப் பரிசாக? என்று நினைக்காதீர்கள். சர்க்கரை நோயாளிக்கு இதை வாங்கிக் கொடுத்துப் பாருங்கள். அவர் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறார் என்பதைக் கண்கூடாகக் காண்பீர்கள்.

திருமணத்தின்போது தங்கம் அல்லது வெள்ளிப் பொருட்கள் பரிசளிப்பது இப்போது வழக்கமாகிவிட்டது. தங்கத்தின் விலை உச்சத்தில் இருப்பதால்  நம்முடைய பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு வெள்ளிக்காசு வாங்கிக்கொடுத்தால், பரிசை பெறுபவருக்கு அதை மாற்றி வேறு பெரிய பொருளாக வாங்க வசதியாக இருக்குமே!

பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் பரிசளிக்க வேண்டுமானால், பொம்மைகள் வாங்குவதைத் தவிர்த்து பென்சில், ரப்பர், பேனா, அகராதி, வாய்ப்பாடு,புத்தகங்கள் போன்றவற்றை பரிசளிக்கலாம். பெரிய பெரிய படங்களுடன் உள்ள வரைந்து பழகும் புத்தகம்(Drawing book), நோட்டுப் புத்தகங்கள் வாங்கித் தரலாம். இவ்வாறு தேவைக்கு ஏற்ப பயனுள்ள பரிசுகளை நாம் கொடுக்கலாம்.

0 comments:

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.