லட்சியமா... அப்படீன்னா...?


 டிசம்பர் 21-ல் உலகம் அழியும் என்று தொலைக்காட்சியிலும், இணையதளங்களிலும், செய்தித்தாள்களிலும் பேட்டி கொடுத்தவர்களை பார்த்து, எள்ளி நகையாடி சிரித்தபடி புதிய ஆண்டு 2013 பிறந்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் பலர் புத்தாண்டுத் தீர்மானம் எடுப்பர். ஒவ்வொருவரின் தீர்மானமும் விதவிதமாக இருக்கும்.
சிலர் தனது தீய பழக்கங்களை விட்டுவிட தீர்மானிப்பர்.சிலர் நல்ல பழக்கங்களை ஆரம்பிக்க தீர்மானிப்பர். சிலர் தான் விரும்பும் பொருளை வாங்கிவிட தீர்மானிப்பர். சிலர் இனியாவது வாழ்வில் முன்னேற,வெற்றியடைய முயற்சிகள் செய்ய வேண்டும் என தீர்மானிப்பர்.இப்படியான தீர்மானத்தை நாம் இலக்கு என்றும்,லட்சியம் என்றும் சொல்லலாம்.

லட்சியம் நான்கு வகைப்படும்.அவையாவன:
  • உடனடி லட்சியம்
  • குறுகிய கால லட்சியம்
  • நீண்ட கால லட்சியம்
  • வாழ்நாள் லட்சியம்
உடனடி லட்சியம் என்பது அன்றைய தினத்தில் செய்து முடிக்க வேண்டிய இலக்கை குறிக்கும்.

குறுகிய கால லட்சியம் என்பது சில தினங்களில் அல்லது சில மாதங்களில் அல்லது அடுத்த வருடம் பிறப்பதற்குள் அடைய வேண்டிய இலக்கை குறிக்கும்.

நீண்ட கால லட்சியம் என்பது 2,5 அல்லது 10 என சில வருடங்களுக்குப்பின் தான் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற இலக்கைக் குறிக்கும்.

வாழ்நாள் லட்சியம் என்பது தான் என்னவாக(டாக்டராக,கலெக்டராக,பொறியாளராக என) எதிர்காலத்தில் என்ன தொழில் செய்ய போகிறோம் என்ற இலக்கைக் குறிக்கும்.

பள்ளிக்குழந்தைகளிடம் லட்சியம் பற்றிக் கேட்டால் தான் நன்றாக படித்து எதிர்காலத்தில் மருத்துவராக அல்லது ஆசிரியராக அல்லது கணினி மென்பொருள் வல்லுநராக விரும்புவதாக ஏதேனும் ஒரு தொழில்படிப்பு பற்றி சொல்வர்.

பள்ளி அல்லது கல்லூரி மாணவர்கள் சிலர் மேற்படிப்பு அல்லது பிடித்த மொபைல் அல்லது பைக் வாங்குவதை லட்சியம் என்பர். அவர்களின் பெற்றோர்களில் சிலருக்கு தன் பிள்ளைகளின் படிப்பு பற்றியும்,அவர்களின் எதிர்கால வாழ்விற்கு தேவையான பணம் அல்லது சொத்து சேமித்து வைப்பதை பற்றியும் லட்சியம் இருக்கும்.

இன்னும் சிலருக்கு தன் பிள்ளையை சிறந்த ஒழுக்க சீலனாக,சிறந்த மனிதனாக,சான்றோனாக வளர்க்க வேண்டும் என்பது லட்சியமாக இருக்கும்.சிலருக்கு தன் சின்னச்சின்ன ஆசைகள் நிறைவேற வேண்டும் என்பது லட்சியம் ஆகும்.சிலருக்கு தான் விரும்பும் ஆடைகளை,நகைகளை வாங்கி அணிந்து விட வேண்டும் என்பது லட்சியமாக இருக்கும்.

சிலர் தன் எதிர்கால வாழ்வு பற்றி அநேக கற்பனைகளை,கனவுகளை சுமந்து கொண்டு,அவற்றை எப்படியாகிலும் நிஜமாக்கிவிட வேண்டும் என்பதை லட்சியமாக வைத்திருப்பர்.

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்கும். ஒரு வாகனத்தில் ஏறி பயணம் செய்ய வேண்டுமானால்,நாம் எந்த இடத்தில் போய் இறங்க வேண்டும் என்ற இலக்கு தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும்.அப்போது தான் பயணம் இனிமையாகும்.இறங்க வேண்டிய இலக்கு உறுதியாகத் தெரியாவிட்டால்,காலமும்,பயணத்திற்கு ஆகும் பணச்செலவும்,நம்மை நம்பி நம்மோடு பயணித்தவர்களின் பயணமும் வீணாகிப்போகும்.

அதுபோலத் தான் வாழ்வும்.

எனவே வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்க வேண்டும்.

அது குறுகிய கால லட்சியமாகவோ அல்லது நீண்ட கால லட்சியமாகவோ இருக்கலாம்.

இதுதான் லட்சியம் என்று முடிவெடுத்தபின்.. அதை நோக்கிய பயணம்தான் நம் கண்ணுக்கு தெரிய வேண்டும்.ஒருவரது எண்ணம் வெறும் கற்பனையாகவோ, ஆசையாகவோ இருந்தால் மட்டும் போதாது. அதனை அடையும்வரை மிக உறுதியாகச் செயல்பட வேண்டும்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள்...லட்சியமா அப்படீன்னா...? என்று அலட்சியமாக கேட்பார்கள்.இவர்கள் தான் தோல்வி பற்றிய பயத்தால் லட்சியங்களை அமைத்துக் கொள்ளாதவர்கள்.தன்னம்பிக்கை இல்லாதவர்கள்.இவர்கள், தான் விரும்பும் எந்த ஆசையும் நிறைவேறாது,எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொள்வார்கள்.

நம் வாழ்வில் எல்லாம் இறைவன் விதிப்படி தான் நடக்கும் -அதை மறுப்பதற்கு இல்லை.ஆனால் எந்த முயற்சியும் எடுக்காமல் எல்லாம் விதி என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

பரீட்சைக்கு என்று எதுவும் படிக்காமல் வெட்டிப்பேச்சு பேசி அரட்டை அடித்துவிட்டு,பரீட்சையில் விடைத்தாளில் விடை எதுவுமே எழுதாமல் தான் முதல் மதிப்பெண் பெறாதது இறைவனின் விதி தான், தன் தவறு எதுவும் இல்லை என்று சொல்வது அறிவுடைமை ஆகுமோ?அது போலத் தான் நாம்
ஒவ்வொருவரும் நமக்கென நியாயமான லட்சியங்களை அமைத்துக்கொண்டு அதை நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும்.

ஓட்டப்பந்தயத்தை வேடிக்கை பார்ப்பதை விட ஓடித் தோற்றுப்போவது எவ்வளவோ மேல்!

ஆனால் சில பேர் அடுத்தவர்களின் லட்சியத்தில் குளிர்காயப் பார்ப்பார்கள் எனவே அவர்களிடம் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்

லட்சியமில்லாதவரின் வாழ்வு உப்பு இல்லாத உணவைப் போன்றது.ஒரு குடும்பத்தலைவர் தனது லட்சியம் பற்றி தன் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கலந்துபேசி அவர்கள் ஒத்துழைப்புடன் லட்சியம் நிறைவேற முயற்சி செய்ய வேண்டும்.ஏனெனில் இன்பத்திலும்,துன்பத்திலும் நம்மை தாங்கும் தூண்,நம் குடும்பமே ஆகும்.

ஒரு குடும்பத்தலைவருக்கு லட்சியம் இல்லாவிட்டால் அவரது குடும்பமே இலக்குத் தெரியாமல் வாகனத்தில் பயணம் செய்வதை போல வாழ்வில் என்ன செய்வது என தெரியாமல் தத்தளிக்க வேண்டி வரும்.

உதாரணமாக,ஒருவர் நன்கு உழைத்து சம்பாதித்து, சம்பாதித்த பணம் முழுவதையும் தனது எதிர்காலம் பற்றியோ,குடும்பத்தினர் பற்றியோ எந்த கவலையோ எண்ணமோ லட்சியமோ இல்லாமல்,மற்றவர்கள் தன்னை பெருமையாக நினைக்க வேண்டும் என்ற நினைப்பில் ஆடம்பரமாக செலவழிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.திடீரென்று அவரது வேலை பறி போனால்,அவரது நிலை என்னாகும்?அவர் ஆடம்பரமாக செலவழித்தபோது பயன் பெற்றவர்களோ அல்லது பெருமையாக பேசியவர்களோ அவர் துன்பத்தில் உழலும் போது உதவுவார்களா?அவர் சேமிப்பு என்ற லட்சியத்தை குடும்பத்தினரின் ஒத்துழைப்போடு நடைமுறைப்படுத்தி இருந்தால் அவருக்குத் துன்பமே வராது.

எனவே இன்னிக்கு வரைக்கும் எந்த லட்சியமும் இல்லாமல் இருந்தால்கூட பரவாயில்லை...இனியாகிலும் நமக்கென லட்சியங்களை அமைத்துக்கொண்டு நம் குடும்பத்தினரின் ஒத்துழைப்போடு அதை அடைய முயற்சி செய்வோம்!

சரி,உங்கள் லட்சியம் என்ன என்று முடிவு செய்துவிட்டீர்களா? உங்கள் லட்சியங்கள் பற்றி இங்கே பகிர்ந்து கொள்ளலாமே!

0 comments:

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.