முதுகு வலி


பெண்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் முதுகுவலி முக்கிய இடத்தைப் பிடித்து விட்டது. வீட்டிலிருக்கும் பெண்கள், அலுவலகத்துக்குப் போகும் பெண்கள் என வித்தியாசம் பார்க்காமல் அனைவரையும் இந்த வலி வாட்டி வதைக்கிறது.
        குழந்தைகளை அவசர அவசரமாக எழுப்பி, சமைத்து பள்ளிக்கு அனுப்பி விட்டு, எல்லா வேலைகளையும் முடித்து அமரும் குடும்பத் தலைவிகளுக்கு அடுத்த சில நிமிடங்களில் முதுதுவலி பின்னியெடுக்கும்.
        
அண்மைக்காலமாக உலகளாவியப் பிரச்னையாக மாறி வரும் முதுகுவலியின் பாதிப்பு பத்து பேரில் எட்டு பேருக்கு இருப்பதாக மருத்துவ ஆய்வறிக்கை கூறுகிறது. குறிப்பாக பெண்களே இந் நோயால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், பேறுகாலத்தின்போது 50 சதவீத பெண்கள் இந்த வலியால் அவதியுறுவதாகவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  
       
மிக்ஸி, கிரைண்டர், வாஷிங்-மெஷின் என பெண்களின் அன்றாட அலுவல்கள் எளிதாகி, உடல் உழைப்பு குறைந்ததே முதுகு வலிக்கு மூலக் காரணம் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.
      
முதுகுவலிக்கான காரணத்தை ஆராயும் முன், தண்டுவடத்தின் வடிவமைப்பை அறிந்துக் கொள்வது அவசியம்.
      
நரம்புகள், மூட்டுகள், தசைகள், தசைநாண்கள் மற்றும் தசைநார்கள் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் சிக்கலான பிணையம் தண்டுவடம். தோள்பட்டை, மார்பு, இடுப்பு, வயிறு என அனைத்து உறுப்புகளின் தசைகளும் முதுகு தண்டுவடத்தோடு இணைந்திருக்கின்றன.
    
அதிசய வடிவமைப்பு கொண்ட தண்டுவடத்தில் 33 உருண்டைகள் உள்ளன. இவை அனைத்தும் நீட்சித்தன்மை கொண்ட தசைநார்களால் பிரிக்கப்பட்டுள்ளனஇதனால், நாம் எத்தனை முறை எம்பிக் குதித்தாலும், துள்ளினாலும் தண்டுவடம் ஸ்பிரிங்' போல் செயல்பட்டு நமது உடலைப் பாதுகாக்கிறது.
    
அரக்கப் பரக்க வேலை செய்யும்போது தண்டுவடத்தின் தசைகள் இறுகி விடுகின்றன. வேலை முடிந்து ஓய்வு எடுக்கும்போது இவை இறுக்கம் தளர்ந்து இயல்பு நிலைக்கு திரும்பப் பார்க்கின்றன. இதன் விளைவே முதுகு வலி என்று கூறப்படுகிறது.
     
கழுத்து வலி, மேல்முதுகு வலி, கீழ்முதுகு வலி என மூன்று வகைகளாக முதுகு வலி பிரிக்கப்படுகிறது.
     
அளவுக்கு அதிகமான பாரம் தூக்குவது, தவறான முறையில் நிற்பது, நடப்பது, அமர்வது, தூங்குவது, இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பள்ளத்தில் ஏறி,இறங்குவது, நான்கு சக்கர வாகனங்களில் திடீர் பிரேக் போடும்போது, குளியலறை, மாடிப்படிகளில் வழுக்கி விழுவது என பல்வேறு காரணங்களால் முதுகு வலி பாதிப்பு ஏற்படுகிறது.
     
இவை தவிர எலும்பு சம்பந்தமான நோய்களின் பாதிப்புகளாலும் இந் நோய் அழையா விருந்தாளியாக தொற்றிக் கொள்கிறது.
    
உயிருக்கு ஆபத்தில்லாத இந் நோய்க்கு இதுவரை எந்த மாய, மந்திர மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. வருங்காலத்தில் கண்டுபிடிக்கப்படுவதும் அரிது என்றே தோன்றுகிறது.
      
வலி நிவாரணிகள், மிகவும் சிக்கலான நிலையில் அறுவைச் சிகிச்சை ஆகியவையே முதுகு வலிக்கு தீர்வாக உள்ளனஎனினும், பெண்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் எளிய பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் முதுகு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
       
நிற்கும்போது உடலின் எடையை இரு கால்களும் தாங்கியிருக்கும்படி நிற்க வேண்டும்.


கூன் முதுகிட்டு அமர்வது, நடக்கும்போது கூன் போடுவது, பொருள்களை தூக்கும்போது முதுகை வளைப்பது அறவே கூடாது.
  
தண்ணீர் வாளி, குடங்களை தூக்கும்போது முதுகு நேராக இருப்பது அவசியம்.அலுவலகத்துக்கு செல்லும் பெண்கள் இருக்கையில் அமரும்போது முதுகுப் பக்கத்துக்கு குஷன் வைத்த தலையணையை வைத்துக் கொள்ளலாம். இருக்கையை பின்புறம் சாய்வாக வைத்துக் கொள்வது நல்லது. கார் ஓட்டுபவர்கள் இருக்கையை 15 டிகிரி பாகை சாய்வாக வைத்துக் கொள்ளலாம்.
       
ஹை ஹீல்ஸ் காலணி, ஷூக்களை தவிர்க்க வேண்டும்.


குப்புறப்படுத்து தூங்குவது கூடாது. இதனால், முதுகு வலி ஏற்படுவதோடு முகத் தசைகளும் சீக்கிரமே முதுமையாகி விடும்.
      
ஒரு பக்கம் சரிந்து முழங்கால்களை சற்று மடித்துப் படுப்பதே தூங்குவதற்கு ஏற்ற நிலையாகும்.
      
முழங்கால்களுக்கு இடையே சிறிய தலையணையை வைத்துக் கொள்வது சொகுசாக அமையும்.
      
மிகவும் மென்மையாக மெத்தென்று இருக்கும் படுக்கைகளைத் தவிர்க்க வேண்டும். கடினமான படுக்கையே முதுகுக்கு இதமளிக்கும்.
     
இவை தவிர நீந்துவது, காலை, மாலையில் விரைவு நடைப்பயிற்சி என அன்றாட அலுவல்களை அமைத்துக் கொண்டால் முதுகு வலிக்கு விரைவில் 'குட் பை' கூறிவிடலாம்.

0 comments:

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.