ஜக்காத்தை மறைமுகமாக கொடுத்தலின் சிறப்பு




அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

உலகில் இஸ்லாம் மார்க்கமே பிறருக்கு கொடுத்து உதவுகின்ற ஈகைத் தன்மையை அதிகமாக போதித்து அதை முஸ்லிம்களின்
ஐம்பெருங் கடமைகளில் ஒன்றாகவும் ஆக்கியிருக்கிறது.

மேலும் இறைவனால் கட்டளையிடப்பட்டுள்ள இந்த கடமையை நிராகரித்தவர் உண்மையான முஸ்லிமாக இருக்கமுடியாது.

“(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்” (அல்-குர்ஆன் 30:39)

“(முஃமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்! இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்! மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள்” (அல்-குர்ஆன் 24:56)

தான் ஈட்டிய செல்வத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை வறியவர்களுக்கும் இறைவன் தன்னுடைய திருமறையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கும் பகிர்நதளிக்க வேண்டும் என்று வரையறுத்துள்ள இஸ்லாம் அவ்வாறு தாம் செய்த தர்மங்களை, தாம் செலுத்திய ஏழை வரியாகிய ஜக்காத்தைப் பிறருக்கு சொல்லிக் காண்பித்தல் கூடாது என்றும் கட்டளையிடுகிறது.

வெளிப்படையாக தர்மம் செய்வதைவிட மறைத்து செய்வது மிகச்சிறந்தது!

“தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 2:271)

நம்மில் பலர் இறைவனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு இறைவனிடம் மறுமையில் அதிக நன்மைகளைப் பெறவேண்டும் என்ற பேராவலில் தர்மம் செய்வது யாரென்றே தெரியாதவாறு வாரி வழங்கும் வள்ளல்களாக இருக்கின்றனர்.

தமது வலது கரம் கொடுப்பது இடது கரத்திற்குத் தெரியாதவாறு கொடுக்கின்றனர். அல்லாஹ் இத்தகையவர்களுக்காக மறுமையில் மிகச் சிறந்த நற்பேறுகளை இன்ஷா அல்லாஹ் வழங்குவான்.

ஆனால் சிலர், தன்னுடைய சுய விளம்பரத்திற்காகவும் தம்மை வள்ளல் எனப் பிறர் புகழ வேண்டுமென்பதற்காகவும் தினசரிகளில் விளம்பரம் செய்தும் போஸ்டர் அடித்து ஒட்டியும் தங்களின் ஈகைத் தனத்தை தாங்களே மெச்சிக் கொள்கின்றனர்.

இன்னும் சிலரோ ஆரம்பத்தில் வறியவர்களின் மேலுள்ள அநுதாபத்தால் அவர்களுக்கு உதவுகின்றனர். ஆனால் ஒரு சூழ்நிலையில் இறைவனின் அருளினால் அத்தகைய ஏழைகள் பொருளாதார வளர்ச்சியில் முன்னுக்கு வந்தவுடன் ஆரம்பத்தில் அவர்களுக்கு உதவியவர்கள் ஷைத்தானின் சூழ்ச்சிக்கு உட்பட்டு தம்மால் உதவி பெற்றவர்களை நோக்கி, ‘என்னால் தான் நீ முன்னுக்கு வந்தாய்’, ‘ நான் தான் நீ இத்தகைய நிலைக்கு உயர உதவி செய்தேன்’, ‘நான் உனக்கு உதவி செய்யாவிட்டால் உன்னுடைய நிலை என்ன?’ என்பது போன்ற சில வார்த்தைகளை அவர்களிடம் நேரிடையாகவோ அல்லது பிறரிடமோ கூறி உதவி பெற்றவர்களின் மனம் நோகும்படி சில சமயங்களில் பேசி விடுகின்றனர்.

ஆனால் இவ்வாறு செய்த உபகாரத்தைப் பிறரிடம் சொல்லிக்காட்டுவது இஸ்லாத்தில் பெரும்பாவமாகும்.

செய்த உபகாரத்தை சொல்லிக் காட்டுவதால் நன்மைகள் பாழாகிவிடும்!

அல்லாஹ் கூறுகிறான்:

“நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை” (அல்-குர்ஆன் 2:264)

வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாத அளவிற்கு இரகசியமாக கொடுத்தால் மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இடம் கிடைக்கும்!

வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தன்னுடைய நிழலில் அல்லாஹ் ஏழு பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அவர்கள்:

1) நீதிமிக்க அரசன்.
2) அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்திருக்கும் இளைஞன்.
3) பள்ளிவாசல்களுடன் பிணைக்கப்பட்ட இதயத்தை உடையவன்.
4) அல்லாஹ்வுக்காகவே நேசித்து, அவனுக்காகவே ஒன்றிணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர்,
5) அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் தன்னை (தவறுக்கு) அழைத்தபோது ‘நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்’ எனக் கூறியவன்.
6) தன்னுடைய இடக்கரத்துக்குத் தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாக தர்மம் செய்பவன்,
7) தனித்திருந்து அல்லாஹ்வை நினைத்து கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடித்தவன் ஆகியோராவர்.

என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”
(அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி)

சொர்க்கம் நுழையாத மூவர்!

“சதி செய்பவனும், உலோபியும், செய்த தர்மங்களைச் சொல்லிக்காட்டுபவனும் சுவர்க்கம் நுழையமாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்” (ஆதாரம் : நஸயி, திர்மிதி)

மேற்கண்டவைகளிலிருந்து பெறும் படிப்பினைகள்:
  • தான தர்மங்களை வெளிப்படையாக செய்தாலும் நல்லது! ஆனால் மறைத்து செய்வது அதை விடச் சிறந்தது
  • வலகு கை கொடுப்பது இடது கைக்கு தெரியாத அளவிற்கு இரகசியமாக தர்மம் செய்தால் மஹ்ஷரில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இடம் கிடைக்கும்.
  • செய்த தர்மத்தை அல்லது உதவியை சொல்லிக்காட்டி நிந்தனை செய்தால் நன்மைகள் எல்லாம் பாழாகிவிடும்.
எனவே சகோதர சகோதரிகளே! நமது அரும்பாடுபட்டு செய்த, சேகரித்த நன்மைகளை பிறருக்கு சொல்லிக்காட்டுதல் என்ற இழிசெயலின் மூலம் இழப்பது என்பது மிகப்பெரிய கைச்சேதம் அன்றோ?

அல்லாஹ் இத்தகைய இழிசெயலிலிருந்து நம்மனைவரையும் பாதுகாப்பானாக!

நன்றி: சுவனத்தென்றல்

0 comments:

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.