உயர் இரத்த அழுத்தம்




"உலகம் முழுதும் 25 முதல் 30 சதவீதத்தினர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காரணம், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வராவிட்டால், இதய பாதிப்பு, இதயம்
மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு, ரத்த நாளங்கள் சிதைந்து போதல், கண் பார்வை பறிபோதல் ஆகியவை ஏற்படும்.

நினைவுத் திறனும் குறைந்து, சீரான சிந்தனை தடை படும். இருபது வயதை அடைந்து விட்டாலே, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 40 வயதை அடைந்து விட்டால், ஆண்டுதோறும், ரத்த அழுத்தப் பரிசோதனையை வழக்கமாக கொள்ள வேண்டும்.

உணவில் சேர்க்கும் உப்புக்கும், ரத்த அழுத்தத்திற்கும் தொடர்பு உண்டு. அதிக உப்பு சேர்த்து கொண்டால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். சிலருக்கு, சிறியளவில் உப்பு சேர்த்து கொண்டாலே, உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். மக்கள் தொகையில், 20 சதவீதத்தினர் இவ்வகையை சேர்ந்தவர்கள். சீரான உடல்நிலையில் உள்ளவர்கள் தினமும், 5 கிராம் அல்லது ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து கொள்ளலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.

நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு, நாள் ஒன்றுக்கு, மொத்தமாக தேவைப்படும் உப்பு, 4 டீஸ்பூன் தான். உப்பு அளவை கணக்கிடும் போது, உணவில் இயற்கையாகவே உள்ள உப்பையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லா உணவிலும் - குடிநீரில் கூட, இயற்கை உப்பு உள்ளது.

எல்லா வகையான உணவு தயாரிப்பிலும், ஏதாவது ஒரு வகையான உப்பு சேர்க்கப்படுகிறது. மோனோசோடியம் க்ளூடாமேட், சோடியம் நைட்ரைட், சோடியம் சாச்சரின், சோடியம் பைகார்பொனேட் (பேக்கிங் சோடா), சோடியம் பென்சொயேட் ஆகிய ஏதாவது ஒரு உப்பு, தக்காளி சாஸ், சோயா சாஸ், ஊறுகாய் வகைகளில் சேர்க்கப்படுகிறது.

பதப்படுத்தப்பட்ட ஆட்டிறைச்சி, இறைச்சியை உள்ளடக்கி செய்யப்படும் பலகாரங்கள், பர்கர், பிட்சா ஆகியவற்றில், அதிகளவு உப்பு சேர்க்கப்படுகிறது.

ரத்த அழுத்தத்தைச் சீராக்க, நிறைய மருந்துகள் தற்போது கிடைக்கின்றன. மருத்துவர் ஆலோசனைப்படி,வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு, இவ்வகையான மருந்துகளையும் சிறியளவில் உட்கொண்டு வந்தால், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

இதற்கு சுய முயற்சி தேவை. வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது அவசியம், உங்கள் உடல் எடை, சீராக இருக்க வேண்டியதும் அவசியம்.

உடல் எடை அதிகரிக்கும் போது, ரத்தக் குழாய்களுக்கான அழுத்தம் அதிகரிக்கும். எனவே, பி.எம்.ஐ., அளவைச் சரியாக வைத்துக் கொள்ளுங்கள். செயலற்றுக் கிடப்பவர்களின் இதயத் துடிப்பு அதிகரித்து, தேவைக்கு அதிகமான பணி செய்யும் நிலை ஏற்படும். எனவே, இதயம் சீக்கிரம் செயலிழக்கும்.

நடைபயிற்சி, மித ஓட்டப் பயிற்சி, நீச்சல் பயிற்சி, ஓட்டப் பயிற்சி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம்.

புகை பிடிப்பது, அருகில் இருப்பவர் விடும் புகையை சுவாசிப்பது, மூக்குப்பொடி போடுவது, புகையிலை மெல்வது ஆகியவை, ரத்தக் குழாய்களை பாதிக்கும் வகையிலான ரசாயனங்களை வெளியிடுகின்றன. இவை ரத்தக் குழாய்களை சுருக்கி விடுவதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

உணவில் தினமும் 5 கிராமோ அல்லது அதற்கு குறைவான அளவோ, உப்பு சேர்ப்பது நல்லது. உடலில் நீர் சத்தை தக்க வைக்க இது பயன்படும். இந்த அளவை மீறினால், அதே நீரே, உடலில் தங்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும்.

பழங்கள், காய்கறிகளில் உள்ள பொட்டாசியம் சத்து, உடலில் சேரும் உப்புச் சத்தை அதிகரிக்க விடாமல் செய்கிறது. எனவே, தினமும் 4 முதல் 6 முறை பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். உணவு மூலமாக கிடைக்கும் அல்லது சூரிய ஒளி மூலம் கிடைக்கும் வைட்டமின் டி சத்து, சிறுநீரகத்தில் நொதிகளைச் சீராகச் செயல்பட வைத்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்காமல் பாதுகாக்கும்.

எனினும், அதிகளவிலோ அல்லது தாறுமாறாகவோ வெயிலில் அலைய நேர்ந்தால், ரத்த அழுத்தமும் சீரற்றதாகி விடும்.

தொடர்ந்து அதிக பதட்டத்துடன் இருந்தாலும், ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
யோகா மூலம் பதட்டத்தை தவிர்க்கலாம்.

நீரிழிவு நோய், அதிக கொழுப்புச் சத்து சேர்வது, சிறுநீரக நோய், தூக்கமின்மை ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். அவை, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் முக்கிய காரணிகள்.

இப்போதெல்லாம், 6 - 8 வயது குழந்தைகள் கூட, அளவுக்கு அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்கின்றனர். அதை ஈடு கட்டும் வகையிலான உடற்பயிற்சிகள் செய்வதில்லை.

எனவே, அவர்களின் வாழ்க்கையை முறையை, இளம் வயதிலேயே மாற்றினால், இப்பிரச்னையை தவிர்க்கலாம்.

0 comments:

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.