சேமிப்பதால் என்ன பயன்?




உலக நாடுகள் பலவற்றில் பொருளாதார பெருமந்தம் அடிக்கடி ஏற்படுகிறது.இதனால் பலர் வேலை இழக்கும் சூழல் உருவாகிறது.திடீரென்று குடும்பத்தலைவர்
வேலை இழப்பதால், அதன் பிறகு வாழ்க்கையை வாழ வருமானத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அந்த குடும்பமே தவிக்கிறது.

இன்னும் சிலர் இளமையில் ஓடியாடி வேலை பார்க்கிறார்கள். கிடைக்கும் வருமானத்தை எதிர்காலத்தை பற்றி சிறிதும் சிந்திக்காமல்,ஆடம்பரமாக செலவு செய்து விடுகிறார்கள். வயதாகி ஓய்ந்து போகும் வேளையில் வயிற்றுபாட்டைத் தள்ளக்கூட வழியில்லாமல் போகிறார்கள்.

நமக்கோ நம் பிள்ளைகளுக்கோ திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்படலாம்.கையில் அறவே பணம் இல்லாவிட்டால் மருத்துவ செலவுக்கு என்ன செய்வது?

அடுத்தவர் கையை எதிர்பார்க்க வேண்டிய சூழல் உருவாகும்.அடுத்தவரிடம் கடன் பெறுவது மகிழ்வானதா?அது நம் தன்மானத்திற்கு இழுக்கல்லவா?கேட்டவுடன் கடன் தான் கிடைத்து விடுமா?அவ்வாறு கடனாக பெறும் பணம் கையில் கிடைக்கும் வரை நோய்வாய்ப்பட்டவரின் நிலை என்னாகும்?

கடன்பட்டு மருத்துவ செலவும் செய்தாகிவிட்டது என வைத்துக் கொள்வோம்

பட்ட கடனை அடைக்க முடியாமல்,கடனீந்தவரின் முன் நாம் தலைகுனிந்து நிற்பதை,நம் குடும்பத்தார் பரிதாபமாக(சிலர் ஏளனமாக)பார்ப்பார்களே?அப்போது நம் மனம் சொல்ல இயலாத அளவிற்கு வேதனைப்படும் அல்லவா?

இந்த வேதனையை எல்லாம் தவிர்க்க இன்றே சேமிக்க ஆரம்பிக்கலாமே…!

ஆம்! மாதந்தோறும் கிடைக்கும் வருமானத்தில் குறைந்தபட்சம் 5% தொகையையாவது சேமிக்க வேண்டும்.
பணத்தை சேமிக்க விரும்பினால் நாம் சில காரியங்கள் செய்ய வேண்டும்.
  • சேமிப்பின் தாரக மந்திரமே சிக்கனம் தான். நாம் நீண்டகால பண சேமிப்புத் திட்டத்தில் சேருவதைவிட, தினமும் சிறுதொகை சிக்கனம் பிடிப்பதே பெரிய பலன் தரக்கூடியதாகும்.
  • முதலில் நாம் பணத்தை எந்த வழியில் செலவு செய்கிறோம் என்பதைக் கவனித்து தவிர்க்க வேண்டிய வீண் ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும். 
  • செல்போன் அழைப்புகளை தேவையான நேரத்தில் மட்டும் பேசலாம். கண்டிப்பாக குறிப்பிட்ட தொகை மிஞ்சும். 
  • சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து பணத்தை சேமிப்பது நல்ல வழி. மாதம் தோறும் சிறு தொகையை சேமிப்புக் கணக்கில் போடலாம். அது `சிறுதுளி பெருவெள்ளம்’ எனும் பொன்மொழிக்கேற்ப பெருகி வளரும்.
  • முதலில் சேமிக்க பழகுவது கொஞ்சம் கடினமான காரியம். எனவே காலத்தை ஒத்திபோடாமல் அந்த சிந்தனை தோன்றிய இக்கணமே சேமிப்பை ஆரம்பிக்க வேண்டும்.   
  • வீட்டுச் செலவுக் கணக்கை எழுதலாம். பணத்தைச் சேமிக்க இதைவிட சிறந்த வழியில்லை. பணம் வரும் வழியும், போகும் வழியும் தெரிந்தால்தான் `பணம் எப்படித்தான் காலியாகுதோ’ என்று புலம்பும் நிலைமையைத் தவிர்க்க முடியும்.
  • பணம் வீணாகும் வழியை செலவுக் கணக்கு முலம் தெளிவாகக் கண்டுபிடிக்கலாம். சேமிக்க முடியாமல் போனதற்கான காரணத்தையும் கண்டறிந்து விடலாம். பின்னாளில் நாம் மனநிம்மதியுடன் வாழ, இப்போதே வீட்டுச் செலவை எழுத வேண்டும். 
  • நேற்று வரை இந்த பழக்கம் இல்லாதிருந்தால் இன்றிலிருந்தாவது வரவு செலவை எழுத பழக வேண்டும் .   
  • வீட்டு மளிகைச் சாமான்களை மொத்தமாக வாங்கி விடுவதும் பணத்தைச் சேமிக்கும் சிறந்த வழியே. 
  • அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுவது, நம் பணத்தைக் காலியாக்கி விடும். வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது பணத்தைச் சேமிக்கும் சிறந்த சக்தியாகும். இதனால் உடல்நலமும் பாதுகாக்கப் படும்.
வாழ்வெனும் போர்க்களத்தில் திடீர் பணத் தேவைகள் நம்மை சூழ்நிலைக் கைதியாக்கலாம். அப்போது மற்றவர்களை எதிர்பார்த்து மதில்மேல் பூனையாக தவிக்கும் நிலைமையை இது தடுக்கும்.
  • மொத்தமாக வாங்கிய சமையல் பொருட்களையும் தேவைக்கு ஏற்ப பக்குவமாக பயன்படுத்த வேண்டும். தேவைக்கு அதிகமாக சமைத்து வீணாக்கக் கூடாது.   
  • ஏமாறாமல் இருப்பதுவும் சேமிப்பு வழிகளில் ஒன்றாகும். இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் சலுகை அறிவிப்புகள் வருவதை பார்க்கலாம். ஒன்று எடுத்தால் ஒன்று இலவசம், 50 சதவீதம் தள்ளுபடி என்று கவர்ச்சி அறிவிப்புகள் வருகின்றன. இவையெல்லாம் வியாபார தந்திரம் தான்.
  • கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் நம் சிந்தனை மழுங்கடிக்கபடுகிறது என்பதை மறந்துவிடக்கூடாது.ஆழமாக சிந்தித்து பார்த்தால் உண்மை விலை, தள்ளுபடி விலையை விடக் குறைவாக இருக்கும்.   
  • பழமையில் பெருமை காண விரும்பினால் புதுமையாக பணம் சேமிக்கலாம். ஆமாம், ஏற்கனவே பயன்படுத்தபட்ட பொருட்களை செகட் ஹேண்டாக வாங்குவது பணத்தை மிச்சம் பிடிக்கும் சிறந்த வழியாகும்.
  • வாங்கிய ஓராண்டு காலத்திற்குள்ளாக புதிய காரின் விலை முன்றில் ஒரு பங்கு குறைந்து விடுகிறது. தரமும் தாழ்ந்து போவதில்லை. அப்படி இருக்கும்போது இரண்டாம் தரமாக வாங்கி பயன்படுத்துவதில் என்ன பிழையிருக்கிறது? போதிய அளவு சோதனை செய்து பார்த்து வாங்கி பயன்படுத்தினால் நமக்குத்தானே லாபம். 
  • டீ, காபி செலவு, நொறுக்குத் தீனி, ரெஸ்டாரண்ட் உணவுகள் போன்றவற்றின் செலவுக் கணக்கை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு முறை அவற்றை சொந்த தயாரிப்பில் உபயோகித்தால் எவ்வளவாகிறது என்பதையும் கணக்கு போட்டு பார்த்தால், இரண்டு நிலைக்கும் செலவில் எவ்வளவு வித்தியாசம் என்பது நமக்கே கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும். அதோடு வீட்டு உபயோகம் என்பது நுறு சதவீத ஆரோக்கியமான விஷயமும் கூட.   
  • வீணாக்காமல் பயன்படுத்துவதும் ஒரு சேமிப்புதான். நாம் வாழ்க்கை முழுவதும் நுகர்வோராகவே இருக்கிறோம்.                                           
  • வாழ்வில் சிலவற்றை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். சிலவற்றை குறைவாக பயன்படுத்த வேண்டும். இன்னும் சிலவற்றை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இந்த மூன்றையும் சரியாகச் செய்வதுதான் உண்மையான சேமிப்பாகும்.
  • மின்விளக்கு, மின்விசிறி, ஏ.சி. போன்ற சாதனங்களை தேவைக்கேற்ப குறைவாக பயன்படுத்துவதன் முலம் மின்சார பயன்பாட்டைக் குறைத்து,மின்சார கட்டணத் தொகையில் ஓரளவு சேமிக்கலாம். 
  • பிராட்பேண்ட் இணைப்பு வைத்திருப்போர்,தம் பயன்பாட்டு அளவைப் பொறுத்து Broadband plan-ஐ தேர்ந்தெடுக்கலாம்.அதிக அளவில் இன்டர்நெட் உபயோகிப்போர் Unlimited Plan-ஐயும்,குறைவாக இன்டர்நெட் உபயோகிப்போர் Limited Plan-ஐயும் தேர்ந்தெடுப்பதன் மூலம் டெலிபோன் பில்லிலும் ஓரளவு சேமிக்கலாம்.                                                                
மற்றவர்கள் நம்மை ராஜா என்று நினைக்க வேண்டும் என்பதற்காக ராஜா வேடம் போடுவது எவ்வளவு பெரிய மூடத்தனம்! எனவே மற்றவர்களுக்காக பகட்டாக காட்டிக் கொள்ளவும், அலங்காரத்திற்காகவும் கவர்ச்சிக்காகவும் பொருட்களை வாங்காமல் இருந்தால், அதுவும் சேமிப்புதான்.
    எனவே மாதந்தோறும் கிடைக்கும் வருமானத்தில் குறைந்தபட்சம் 5% தொகையையாவது சேமிக்க ஆரம்பிப்போம்!

    கஞ்சத்தனமாகவோ,ஊதாரியாகவோ இல்லாமல்,சிக்கனமாக வாழ்வோம்!

    வளமும், நலமும் பெறுவோம்!

    2 comments:

    Anonymous said...

    மாஷா அல்லாஹ் !

    நல்ல முன்னுதாரனம் !

    Anonymous said...

    nice...

    Your Comments Please!

    இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.