செல்போனால் வரும் ஆபத்துகள்



பரவிவரும் செல்பேசிகளின் பயன்பாடுகள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் கேடுகள் விளைவிக்கின்றன என்பதனை சமீபத்திய அறிவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன.

அளவுக்கதிகமாக கைபேசி உபயோகிப்பவர்களுக்கு மூளையில் கட்டி ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

13 நாடுகளில் கைபேசி உபயோகிக்கும் 12 ஆயிரத்து 800 நபர்களிடம் ஆய்வுகள் மேற்கொண்டதில் அளவுக் கதிகமாக அலைபேசி உபயோகிப்பதற்கும் மூளையில் கட்டி ஏற்படுவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவிக்கிறது.

அளவுக்கு அதிகமாக அலைபேசியை உபயோகிப்பவர்களில் நூற்றுக்கு 39 பேர் `கிலி யோமா’ என்கிற மூளைக்கட்டி நோயால் அவதிப்படுவதாகக் கண்டு பிடித்துள்ளனர், ஆய்வாளர்கள்.

10 வருடங்களுக்கு மேல் அலைபேசி உபயோகிப்பவர்களின் மூளைக்கும் காதிற்கும் இடையிலான மிருதுவான `அகோஸ்டிக் நியூரினோமா’ எனப்படும் காதொலி நரம்பு அதிகஅளவில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று மற்று மோர் ஆய்வு குறிப்பிடுகிறது.

டில்லியிலுள்ள மூல்சந்த் மருத்துவ நிறுவனத்தின் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் விக்ரம் சிங் இதுபற்றி கூறும்போது, `நமது மூளையில் மின்சார ஓட்டம் உள்ளது. அலைபேசியில் இருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சு மூளையின் மின்னோட்டத்தைப் பாதிக்கிறது” தொடர்ந்து 20 நிமிடம் செல்போனில் பேசினாலே நமது உடம்பின் வெப்பநிலை 1 டிகிரி அதிகரிக்கும் அபாயம் உள்ளது!” என்கிறார்,

டில்லியிலுள்ள குழந்தையின்மை மற்றும் கருத்தரிப்பு ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர் வானி சச்தேவ் கவுர், "தற்போது என்னிடம் வரும் குழந்தையில்லா மலட்டுத்தன்மையுள்ள தம்பதியர்களை ஆய்வுசெய்ததில் நூற்றுக்கு 40 பேர் ஆண்களே மலட்டுத்தன்மையுடன் காணப்படுகின்றனர். இதற்கு அலைபேசி வெளி விடும் மின்காந்த கதிர்வீச்சும் முக்கியக் காரணியாக அமைந்துள்ளது..!” என்கிறார்.

இதுபோலவே செல்பேசி "டவர்களும்" மிகவும் ஆபத்தானவை தான். அவற்றிலிருந்து வரும் பாதுகாப்பற்ற நுண்ணலை கதிர்வீச்சுகளில் சுமார் 60%, தலைப்பகுதிகளில் கிரகிக்கப்பட்டு, கொஞ்சம் மூளையினுள் ஊடுருவி செல்வதாக கண்டறிந்துள்ளனர்.

அலைபேசி கோபுரங்கள் வெளியிடும் மின்காந்த கதிர்வீச்சினால் புற்றுநோய் பாதிப்பு, தூக்கமின்மை, கை-கால்கள் மரத்துப்போதல், மறதி, எரிந்து விழுதல், எரிச்ச லடைதல், ஒற்றைத்தலைவலி போன்ற நோய்கள் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை பாதிக்கின்றன என்பதும் ஆய்வில் உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது.

சிறுகுழந்தைகள் செல்பேசிகளை பயன்படுத்துவது மிகவும் பாதிப்பான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதனையும் பிரிட்டீஷ் தேசிய கதிரியக்க பாதுகாப்புக்கழகம் ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளது. பெரியவர்களைவிட குழந்தைகளை 3.3 மடங்கு கதிர்வீச்சுகள் அதிகமாக பாதிக்கின்றன என்றும், குழந்தைகளின் மண்டைஓடுகள் மிகவும் மெல்லிய தன்மையுடையதாக இருப்பதால் அவை ஆபத்தான கதிர்வீச்சுகளினால் எளிதாக பாதிக்கப்படுவதால் 30 முதல் 40 வயதிற்குள் பெரும்பாலோருக்கு மூளைக்கட்டிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் உறுதிபடுத்தியுள்ளனர்.

அமெரிக்க அறிவியலறிஞர்கள் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளின்படி செல்பேசி பயன்படுத்துபவர்கள் பெரும்பாலோர் ஆண்மைக்குறைவு, விந்தணுக்குறைவு, மகப்பேறின்மை போன்ற ஆபத்திற்குள்ளாவதை கண்டுபிடித்துள்ளனர்.

சுவீடன் தேசிய உழைப்பாளர் வாழ்வு மையம் வெளியிட்டுள்ள ஆய்வாளர்களின் அறிக்கையின் படி 2000 மணி நேரத்துக்கு மேல் செல்பேசியை பயன்படுத்திய 905 முதியவர்கள் மூளைப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதனை வெளிப்படுத்தியுள்ளனர். சாதாரணமாக செல்பேசி பயன்படுத்தாதவர்களை விட 3.7 மடங்கு அதிகமாக செல்பேசி பயன்படுத்துவோர் பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் ஒப்பிட்டுள்ளனர்.

எனவே செல்பேசியை பயன்படுத்தி பேசும்போது உடலுக்கு சற்று தொலைவில் வைத்து பேசுவதும், வாய்ப்புகள் உள்ளபோது சாதாரண தொலைபேசிகளை பயன்படுத்துவதும். வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக செல்பேசி தொடர்புகளை தவிர்ப்பதும், அதிகமாக சூடாகும் வரை பேசுவதை தவிர்ப்பதும். செல்பேசி பயன்படுத்துபவருக்கு மிகவும் பாதுகாப்பானதாகும்.

0 comments:

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.