அத்தியாவசிய தேவைகளின் விலை உயர்வு



பால், மின்சாரம், பேருந்து என்று அத்தியாவசிய தேவைகளின் விலையை ஒரு மூச்சிலேயே உயர்த்தி இருக்கிறார் தமிழக முதலமைச்சர். இந்தியாவில் எந்த ஒரு முதலமைச்சரும், மாநிலமும் செய்திராத முன்னுதாரணமிது.

சுருங்கக் கூறின் இந்த விலை உயர்வினால் ஆவின், அரசுப் போக்குவரத்து கழகங்கள், மின்சார வாரியம் ஆகியவை கடும் கடன் சுமையிலிருந்து
விடுபடும் என்பதெல்லாம் சும்மா ஒப்புக்கு தெரிவிக்கப்படும் சாக்கு. உண்மையில் இவற்றை ஒழித்து தனியார் துறையை விரிவுபடுத்தி கொள்ளையடிப்பதற்குத்தான் இவை உதவப் போகின்றன.

ஆவின் பால் தரமானது, சீக்கிரம் கெட்டுப் போகாது, சத்து விவரம் அறிவிக்கப்பட்ட அளவிலேயே இருக்கும்.

தனியார் பால் இவைகளுக்கு நேரெதிரானது. பொது மக்கள் அனைவரும் ஆவின் பாலையே விரும்புகின்றனர் என்றாலும் கடந்த சில ஆண்டுகளாக தனியார் பால் முதலாளிகள் பெருகி வருவதற்கு அரசே மறைமுகமாக உதவி செய்கிறது. ஆவின் வலைப்பின்னலை கொஞ்சம் கொஞ்சமாக தனியார் முதலாளிகள் கைப்பற்றி வருகின்றனர். ஆவின் பால் கிடைக்காது என்ற தட்டுப்பாட்டை உருவாக்கி தனியார் பால் முதலாளிகள் சந்தையில் கணிசமான அளவை பிடித்திருக்கின்றனர்.

இந்நிலையில் பால் விலை உயர்வு என்பது தனியார் முதலாளிகளை நோக்கி மக்கள் திரும்புவதையே நீண்ட கால நோக்கில் செய்யும். ஆவின் பாலை வைத்து தனது குடும்ப பட்ஜெட்டை போடும் சாதாரண மக்கள் அனைவரும், இனி இந்த விலை உயர்வினால் மாதம் 200 முதல் 400 ரூபாயை அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். இது பெரும்பாலான உழைக்கும் மக்களுக்கு பெரும் சுமை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அது போல பேருந்து கட்டண உயர்வு. தற்போதைய கட்டண உயர்வு மூலம் விரைவுப் பேருந்துகளின் கட்டணம் என்பது ஏறக்குறைய ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை நெருங்கி விட்டது. ஏற்கனவே அரசு பேருந்துகள் போதிய பராமரிப்பின்றி இயக்கப்பட்டு வந்தாலும் கட்டணம் குறைவு என்ற ஒரே காரணத்திற்காக மக்களால் விரும்பப்பட்டு வந்தன. இப்போது அதற்கும் ஆப்பு வைத்திருக்கிறார்கள். இலாபகரமான பேருந்துப் பாதைகள் முழுவதும் தனியாருக்கு திறந்து விடப்பட்டு தனியார் முதலாளிகள் சம்பாதிப்பதால் அந்த பணம் அரசுக்கு வருவதில்லை. இலாபம் இல்லாத பாதைகளுக்கு சேவை அளிப்பது அரசு பேருந்துகள் மட்டும்தான். ஆகையால் மொத்தத்தில் நட்டம் ஏற்படுகிறது.

இது போக மினிபஸ், ஷேர் ஆட்டோ, கால்டாக்சி முதலான தனியார் சேவைகள் மூலம் பொதுப்போக்குவரத்து சேவையிலிருந்து அரசு மெல்ல மெல்ல கழன்று கொண்டு வருகிறது. விரைவுப் பேருந்து மட்டுமல்ல, நகரப் பேருந்துகளின் கட்டண உயர்வும் சாதாரண மக்களை அச்சுறுத்தும் வண்ணம் இருக்கிறது.

5000, 10,000 ரூபாய் சம்பளத்தில் வாழும் மக்களின் மொத்த செலவு திட்டத்தில் போக்குவரத்து மட்டும் 20 சதவீதத்தை எடுத்துக் கொள்ளும். அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தினால் அல்லலுறும் மக்களுக்கு இது பேரிடியாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

அடுத்து மின்சார கட்டண உயர்வை அரசு அறிவிக்காது, ஒழுங்குமுறை ஆணையமே அறிவிக்கும் என்று தனக்கு சம்பந்தமில்லாதது போல நம் முதலமைச்சர் தெரிவிக்கிறார். ஏற்கனவே கிராமங்களில் 5 மணி நேரத்திற்கும் அதிகமான மின்வெட்டு, நகரங்களில் 3 மணி நேரத்திற்கு குறையாத மின்வெட்டு என்று ஏகப்பட்ட பிரச்சினை இருக்கும் போது பட்ட காலிலே படும் என்பது போல கட்டண உயர்வு. இந்தக் கட்டண உயர்வும் ஏறத்தாழ 30 முதல் 40 சதவீதம் இருக்குமென்று தெரிகிறது. அதன்படி 500 ரூபாய் கட்டியவர்கள் இனி 700 ரூபாய் கட்ட வேண்டும். 1000 ரூபாய் கட்டியவர்கள் இனி 1400 ரூபாய் கட்ட வேண்டும்.

பெரு நகர குடித்தன வீடுகளில் யூனிட் ஒன்றுக்கு 7, 8 ரூபாய் வைத்து வாடகைக்கு விடுபவர்கள் இனி பத்து ரூபாய் என்று மாற்றப் போவது உறுதி. அதன்படி 100 யூனிட் மட்டும் பயன்படுத்தும் மக்கள் அதற்கென ரூ.1000 கட்ட வேண்டும். இது வீடுகளில்லாமல் வாடகைக்கு இருக்கும் சாதாரண மக்களுக்கு எத்தகைய துயரமென்பது விளக்காமலேயே புரியும்.

சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தடையின்றி சலுகை விலையில் மின்சாரம் கொடுக்கப்படுவதும், ஷாப்பிங் மால்கள் முதலான பேரங்காடிகளுக்கு விரயமாக்கப்படும் மின்சாரமும்தான் இன்றைய தட்டுப்பாட்டிற்கு காரணம்.

இவர்களுக்கு உரிய விலை வைத்தாலே மின்சார வாரியம் நட்டமின்றி செயல்பட முடியும்.

இது போக ஆளும் கட்சி பொதுக்கூட்டங்களுக்கும், கோவில் விழாக்களுக்கும் கொக்கி போட்டு திருடப்படும் மின்சாரத்திற்கு உரிய கட்டணத்தை வசூலிக்க முடியும். இதையெல்லாம் விடுத்து சாதாரண மக்களை வருத்துவது நியாயமல்ல.

இலவச லேப் டாப், மிக்சி, ஃபேன், கிரைண்டர், ஆடு மாடு போன்றவை கொடுப்பதற்கு மத்திய அரசு நிதி கொடுக்க வேண்டுமாம்.எனில் இதை தேர்தலின் போது தெரிவித்திருக்கலாமே?

இத்தகைய இலவச திட்டங்களை மத்திய அரசு நிதி கொடுத்தால் மட்டும் அமல்படுத்துவோம் என்றல்லவா அறிவித்திருக்க வேண்டும்?

நட்டமடையும் பொதுத்துறைகளுக்காக கட்டண உயர்வை அறிவித்திருப்பதாக கூறும் நம் முதலமைச்சர் அது போல ஆண்டுக்கு 17,000 கோடி ரூபாய் வருமானத்தை அள்ளித் தரும் மற்றொரு ‘பொதுத்துறையான’ டாஸ்மாக்கிற்கு கட்டண  குறைப்பை அறிவிப்பாரா? இல்லை அந்த வருமானத்தைக் கொண்டு பால், பேருந்து விலை உயர்வை செய்யமாட்டோம் என்றுதான் சொல்லுவாரா? முக்கியமாக அவரது பல இலவசத் திட்டங்களுக்கு அமுத சுரபி இந்த டாஸ்மாக்தான்.

கல்வி, போக்குவரத்து, மருத்துவம் என அனைத்து துறைகளிலும் அரசை ஒழித்து விட்டால் அளப்பறிய பணம் தனியார் முதலாளிகளுக்கு போகும். அதற்காகத்தான் இந்த விலை உயர்வு.

ஆக இனி உழைக்கும் மக்கள் தமது மாத செலவில் 2000 ரூபாய் வரை கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும்.

இலவச திட்டங்களை நம் மக்கள் ஆதரித்ததற்கான தண்டனையே இந்த விலை உயர்வு என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

0 comments:

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.