மரம் வளர்த்தல்



மனிதன் இன்று தான் வாழும் பூமியை பெரும் அபாய கட்டத்தில் கொண்டு நிறுத்தி விட்டான். பூமியின் வெப்பம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. "புவி வெப்பமயமாதல்" (Global warming) எனப்படும் இந்த பிரச்சனை பூமியை மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக்கி விடும் என அறிவியலாளர்கள் அச்சம் கொள்கிறார்கள்.
ஆனால் சராசரி மனிதனோ இதைப் பற்றிய எந்த கவலையும் இன்றி சொந்த  பூமியை தன் கழிவுகளால் நிரப்பிக் கொண்டே போகிறான். குடிக்கும் நீரையும் சுவாசிக்கும் காற்றையும், வசிக்கும் இடத்தையும் மாசுபடுத்துவதில் மனிதனுக்கு நிகர் யாரும் இல்லை.

மரங்களின் அவசியம்

தற்போது, உலகை உலுக்கி வரும் பிரச்சினைகளில் சுற்றுப்புற சூழல் மாசடைதல் என்பது மிக முக்கியமானது. இதன் காரணமாகவே பூமி வெப்பமடைகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வாக, மரங்கள் நடவேண்டும் என்பதை அடிக்கடி விவாதித்து வருவதோடு நிறுத்தி விடுகிறோம். இருக்கின்ற மரங்களையும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக, வெட்டிச்சாய்த்து வருகிறோம். ஒரு மரத்தை வெட்டினால், அதற்குப் பதிலாக ஐந்து மரங்களையாவது நட வேண்டும்.

நம்முடைய வீட்டைச் சுற்றி மரங்கள் இருந்தால், நிச்சயம் அந்த வீட்டில் மின்விசிறிகள், குளிர்சாதனப் பயன்பாடு மிகவும் குறையும். மின்கட்டணம் குறையும். குளுமையான வேப்பமரத்துக் காற்று யாருக்குத்தான் பிடிக்காது? மரங்கள் ஆக்சிஜனை வெளியிடுவதன் மூலமும், கரியமில வாயுவை உறிஞ்சிக் கொள்வதன் மூலமும், சுற்றுப்புற சூழல் மாசுபடுதலை பெரிய அளவில் குறைக்கின்றன.

மரங்களால் மழை பெய்யும், நீர்வளம் பெருகும், நீர்வளம் பெருகினால் எல்லா வளங்களும் பெருகும்.

வெப்ப அளவு உயர்வால் ஏற்படும் விளைவுகள்

பூமி வெப்பம் மெல்ல உயர்ந்து வருவதால் பல வகை வைரஸ் நோய்கள் பெருக வழி செய்கிறது. மனித இன ஆரோக்கியத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுகின்றது. இதய நோய் சுவாச நோய்கள் மேலும் தீவிரமடைகிறது.காற்று மண்டலத்தின் தாழ்வடுக்குகளில் ஓசோன் செறிவு அதிகரிக்கச் செய்கிறது. இது சுவாசப் பாதிப்பையும், நுரையீரல் பாதிப்பையும் உருவாக்குகிறது. ஆஸ்த்துமா நோயை மேலும் தீவிரமடைய செய்கின்றது. அளவுக்கு அதிகமான கார்பன் டை ஆக்ஸைடும், அதிக வெப்பமும் விவசாயத்தைப் பாதிக்கிறது.

மலைப் பிரதேசங்களில், மரங்களை வெட்டிச் சாய்த்து அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டுவதன் மூலம், அங்கே நிலத்தின் பிடிப்புத்தன்மை குறைந்து வருகிறது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளுமையான இடங்கள் கூட இப்போது வெப்பமடைந்து வருகின்றன. இப்போது குளிர்சாதன வசதியுடன் தங்குமிடங்கள் இருக்கின்றன. குளிர்சாதனங்கள் குளிரூட்டுவதற்காக வேலை செய்யும் போது வெளிவிடும் நச்சு வாயு, சுற்றுப்புறச் சூழலை வெப்பமடையச் செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மரம் தரும் பலன்கள்
  • மலர்கள், காய், கனிகள் தருகிறது. நிழல், குளிர்ச்சி, மழை தருகிறது.
  • காற்றை சுத்தப்படுத்துகிறது. நாம் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடை கிரகித்துக் கொண்டு, நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது. கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொள்வதால் புவி வெப்பமடையும் விளைவை குறைக்கிறது.
  • மண்ணில் வேரோடிருப்பதால், மண் அரிப்பைத் தடுக்கிறது. நிலச்சரிவுகளை தடுக்கிறது.
  • மரத்தைச் சுற்றி நீர் சேகரமாகவதால், நிலத்தடி நீர் அதிகரிக்கிறது.
  • காய்ந்த சருகு இலைகள் மண்ணுக்கு உரமாகின்றன.
  • ஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்குச் சமமான நன்மைகளைத் தருகிறது.
         1. ரூ. 5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வெளியிடுகிறது.
         2. ரூ. 6.40 லட்சம் மதிப்புள்ள மண் அரிப்பைத் தடுக்கிறது.
         3. ரூ. 10.00 லட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது.
         4. ரூ. 10.30 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது.
  • புயலின் வேகத்தை மரங்கள் கட்டுப்படுத்துகின்றன. கடலோரங்களில் காணப்படும் அலையாத்தி காடுகள் வேர்களில் மண்ணைச் சேகரித்து வைப்பதால் அலையின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்தான் அலையாத்தி காடுகள் என்ற பெயரும் வந்தது. பலமான வேர்களைக் கொண்டிருப்பதால் புயலின் வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது.
  • உயிரோடு இருக்கும்போது மட்டுமின்றி, இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன. ஏழை மக்களின் வீடுகளில் விறகாக - எரிபொருளாகப் பயன்படுகிறது.
  • ஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன் டைஆக்சைடின் அளவு 1000 கிலோ.
எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டு மனித சமுதாயம் நோயற்று வாழ்வதற்கு ஒருதாயைப்போல ஏராளமான மரங்கள் உதவுகின்றன.

வேலை நேரம் தவிர நாம் பெரும்பாலான நேரம் வீட்டில்தான் கழிக்கிறோம். அந்த நேரத்தை பயனுள்ளதாக்க வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் மரங்கள், செடிகொடிகளை வளர்த்தால் காற்று தூய்மையாகும்.

நமக்கு சொந்த வீடோ, வாடகை வீடோ இருக்கட்டும், நம் வீட்டை சுற்றி நம்மால் முடிந்த அளவு மரக்கன்றுகளை நடுவோம்.

மரம் வளர்ப்போம்! வளம் அடைவோம்!

1 comments:

sameer said...

மரத்தின் அருமையை பற்றி உணர்த்தியது நன்று.இது போன்ற நல்ல விஷயங்களை தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துக்கள்...

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.