குர்பானி



"துல்ஹஜ் பிறை பத்தில் மனிதன் செய்யும் குர்பானியைவிட வேறு எந்த செயலும்(அமலும்) அல்லாஹ்விடம் மிக விருப்பமுள்ளதாக இருக்க முடியாது. குர்பானி கொடுக்கப்பட்ட ஆடு
தனது கொம்புடனும், குளம்புடனும், முடியுடனும் கியாமத் நாளில் வரும். அதன் இரத்தம் பூமியில் விழுவதற்கு முன்பே அது அல்லாஹ்விடம் ஒப்புக்கொள்ளப்பட்டுவிடுகிறது. எனவே,
(அல்லாஹ்வின் அடியார்களே!) பரிபூரணமான மனமகிழ்வுடன் குர்பானியை நிறைவேற்றுங்கள்" என்று பெருமானார் (ஸல்)அவர்கள் அருளியுள்ளார்கள்.
- அறிவிப்பாளர்: ஆயிஷா (ரளி), (நூல்: திர்மிதீ, இப்னு மாஜா)

 இறைவனின் கட்டளைப்படி இப்றாஹீம் (அலை) அவர்கள் தன் அன்பு மகன் இஸ்மாயீலை அறுக்க முனைந்தபோது அல்லாஹ் அதற்குப் பதிலாக சுவர்க்கத்திலிருந்து ஒரு ஆட்டை இறக்கி அதை அறுக்குமாறு சொன்னான். இந்த சோதனையில், இறைவனுக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடப்பவர் இப்றாஹீம் (அலை) என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டது.
இதனை நினைவூட்டும் வகையில் அமையப்பெற்ற முக்கியமான வணக்கங்களில் ஒன்றே குர்பானியாகும்.

அதாவது இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக ஷைத்தானிய சக்திகளுக்கு அடிபணியமாட்டேன், இஸ்லாத்திற்காக எனது உடல் பொருள், சொந்தங்கள் அனைத்தையும் இழக்கத் தயார், மற்றவர்களுடன் இதற்காக போராடவும், இப்றாஹீம் (அலை) அவர்களைப் போன்று எந்த சவாலையும் ஏற்றுக்கொண்டு எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஒரு ஏகத்துவவாதியாக வாழவும் நான் தயார் எனும் உணர்வை உருவாக்கும் உன்னத வணக்கம் இது என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

“யாருக்கு வசதி இருந்தும் அவர் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நாங்கள் தொழும் திடலை நெருங்க வேண்டாம்.” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மாஜா, ஹாகிம்)

குர்பானி கொடுப்பவர் வெறும் மாமிசத்தைப் பங்கிடுவதை மாத்திரம் தனது இலக்காகக் கொள்ளாமல் பின்வரும் விஷயங்களை கவனத்திற் கொள்வது கடமையாகும்.
  • இறைவனின் திருப்தியை மட்டும் இலக்காக்கொண்டு அவனுக்காக என்ற கலப்பற்ற தூய்மையான எண்ணத்துடன் அதை நிறைவேற்றல் வேண்டும். மற்றவர்களின் புகழுக்காகவும் பெயருக்காகவும் செய்துவிட்டு இறைவனிடம் கூலியை எதிர்பார்ப்பது எந்த வகையிலும் நியாயமானதல்ல. 
  • “(இவ்வாறு குர்பானி செய்யப்பட்ட) வற்றின் மாமிசங்களோ அல்லது அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைந்து விடுவதில்லை, எனினும் உங்களிலுள்ள பயபக்திதான் அவனை அடையும்.” அல்குர்ஆன் (22:37)
  • அந்த வகையில் குர்பானியை நிறைவேற்ற விரும்பும் ஒருவர் நபியவர்கள் காட்டிய விதத்திலேயே தனது குர்பானியும், ஏனைய விஷயங்களும் அமைய வேண்டும் என்பதற்காக முயற்சி செய்ய வேண்டும். 
  • குர்பானி கொடுக்க நினைக்கும் ஒருவர் துல்ஹஜ் பிறை கண்டதிலிருந்து தனது நகம், முடி ஆகியவற்றை களைதல் கூடாது.
  • குர்பானி கொடுப்பவர்களின் வீடு தேடி வரும் ஏழைகளுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். அவர்களை நச்சரிப்பதோ, நாம் கொடுத்தவற்றை சொல்லிக்காட்டி அவர்களை சிறுமைப்படுத்துவதோ நம் அமலை வீணாக்கிவிடும் செயல்களாகும். எனவே அதில் கவனமாக இருக்க வேண்டும், எப்போதும் நல்ல வார்த்தைகள் பேச பழகிக்கொள்ள வேண்டும்.
  • குர்பானிக்காக கொண்டு வரப்படும் பிராணிகள் சாகப்போகிறதுதானே என்பதற்காக நோவினை செய்வதோ, அதற்கு தீனி வழங்காமல் இருப்பதோ நாம் அதற்குச் செய்யும் அநியாயங்களாகும்.
பங்கு வைத்தல்.
குர்பானி கொடுப்பவர் தமது குர்பானியிலிருந்து உண்ணுவதும்,உறவினர்களுக்கும், அண்டை அயலாருக்கும்,ஏழை,எளியவர்களுக்கும் வழங்குவதும் ஸுன்னத்தாகும்.

இமாம்கள் இதனை மூன்றாக பங்கிட்டு மூன்றில் ஒரு பகுதியை தமக்கும், மற்றொரு பகுதியை தகுதியானவர்களுக்கு அன்பளிப்பாகவும்,இன்னொரு  பகுதியை ஏழைகளுக்கு ஸதகாவாகவும் வழங்கலாம் எனக்கூறுகின்றனர்..

“அ(றுக்கப்பட்ட)வைகளிலிருந்து நீங்களும் புசியுங்கள், கஷ்டப்படும் ஏழைக்கும் உண்ணக்கொடுங்கள்.”அல்குர்ஆன் (22:18)

பங்குவைக்கும் போது தோல், தலை என்பனவும் பங்கு வைக்கப்படுதல் வேண்டும் அவற்றை அறுத்தவருக்கு கூலியாகக் கொடுப்பதோ, அதை விற்பதோ தடை செய்யப்பட்டுள்ளது.

“யார் குர்பானிப் பிராணியின் தோலை விற்றானோ அவன் குர்பானி கொடுத்தவனாக கருதப்படமாட்டான்.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (பைஹகி, ஹாகிம்)

0 comments:

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.