ரமலானின் இறுதிப்பத்து நாட்கள்


புனித ரமலானின் மூன்றாவது பகுதி ஆரமபமாகிறது. ரமலானின் கடைசிப் பத்து தினங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தினங்களாகும். இத்தினங்களில் ஒற்றைப்பட இரவுகள் ஒன்றில் 'லைலத்துல் கத்ர்' இரவு மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'லைலத்துல் கத்ர்" இரவு பற்றி பின்வருமாறு கூறினார்கள்.

'ரமலானின் கடைசி பத்து இரவுகளில்; ஒற்றை இரவுகளான 21 ஆவது இரவு , 23 ஆவது இரவு, 25 ஆவது இரவு, 27 ஆவது இரவு, 29 ஆவது இரவு, "லைலத்துல் கத்ர்" ஆக இருக்கலாம் அதனைத் தேடுங்கள்.'

அதன்பொருளானது கடைசி பத்து நாட்களில் அதனை பெறுவதற்கு அசாதாரணமான முறையில் முயற்சி செய்யுங்கள். அதிகமாக உழையுங்கள் என்பதாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

' எனக்கு 'லைலத்துல் கத்ர'; இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது மறக்கடிக்கப்பட்டுவிட்டது.எனவே, நீங்கள் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான இரவுகளில் அதனை தேடுங்கள்.

'லைத்துல் கத்ர்” இரவு தனிப்பட்ட ஒரு மனிதனோடும் ஒரு குறிப்பிட்ட இரவோடும் தொடர்புடையதாக இருக்கிறது. அதாவது துஆககள் ஒப்புக் கொள்ளப்டுகின்ற ஒரு குறிப்பிட்ட நேரம் மனிதனுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்த இரவு ஒரு குறிப்பிட்ட இரவிலேயே வருகிறது.

ஆகவே, அந்த இரவை அடைந்து கொள்வதற்காக நாம் ஒவ்வொருவரும் கடுமையாக முயற்சிக்க வேண்டும்.

ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்-
'கடைசி பத்து நாட்களில் நபியவர்கள் வணக்கங்களில் எந்தளவு முயற்சிகள் செய்வார்கள் என்றால் ஏனைய நாட்களில் இந்தளவு முயற்சிகள் செய்வதை காண முடியாது.

இறைவனின் புறமிருந்து அருளாக வெளிப்படும் இந்த இரவை அடைந்து கொள்வதற்காக இறுதிப் பத்து தினங்களில் ஒவ்வொருவரும் பெரு முயற்சி செய்ய வேண்டும். இந்த இரவை சரியாக அடையப் பெற்றவர்கள் பெரும் பாக்கியசாலிகளாவர்.

ஒரு தடவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 'ஜிப்ரீல் (அலை) அவர்கள் என் முன் தோன்றி எவனொருவன் அருள் நிறைந்த ரமலான் மாதத்தை அடையப் பெற்றும்,அதில் பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளவில்லையோ, அவன் அழிந்து விடட்டும் என்று சாபமிட்டார்கள். நான் ஆமீன்! (அப்படியே ஆகட்டும்) என்று அங்கீகரித்தேன்.

ஆகவே, இறுதிப் பகுதியான நரக வேதனையிலிருந்து பாதுகாப்பு அல்லது விடுதலை கிடைக்கின்ற பகுதியில், நாம் புனித இரவின் பயனை அடைவதற்காக முயற்சிக்க வேண்டும்.அதற்காக அதிக வணக்கங்களிலும், அதிகமதிகமாக துஆ கேட்பதிலும் பாவமன்னிப்பு கேட்பதிலும், குர்ஆனை ஓதுவதிலும் ஈடுபட வேண்டும்.

ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)அவர்கள் அறிவிக்கிறார்கள்:
‘அல்லாஹ்வின் திருத்தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?’ என்று நான் கேட்டேன்.
அதற்கு,

اَللّٰهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபுஅன்னி’)
பொருள்: அல்லாஹ்வே! நிச்சயமாக நீ மன்னிக்கக் கூடியவன். மேலும் மன்னிப்பை விரும்பக்கூடியவன் எனவே என்னை மன்னித்து விடுவாயாக! (என்று சொல் என்று கூறினார்கள். (நூற்கள்: அஹ்மது, நஸயி, ஹாக்கிம், இப்னுமாஜா 3850, திர்மிதி 3580)
ஏக நாயன் நம் எல்லோருக்கும் புனித 'லைத்துல் கத்ர் இரவை கிடைக்கச் செய்வானாக! ஆமீன்.

0 comments:

Your Comments Please!

இது பற்றிய உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.Comments பதிவதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் கருத்துக்களை adiraipoonga@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனே பதியப்படும்.